பேரூராட்சி நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தரக் கோரி, அந்தப் பேரூராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
செந்தாரப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் ஏசுராஜ், சிங்காரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் அளித்த மனு விவரம்:
செந்தாரப்பட்டி பேரூராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் சிலுவைகிரிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையையொட்டி, பேரூராட்சிக்கு சொந்தமான கிணறும், 50 சென்ட் நிலமும் உள்ளது. இந்த இடத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேரூராட்சி, பொதுப் பணித் துறைக்கு சொந்தமான நிலம், கிணற்றை ஆக்கிரமித்து கோயில் கட்டி வருகிறார். எனவே, ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பேரூராட்சி பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.