வரி வசூல் குறைவால் மாநகராட்சி வருவாய் பணியாளர்களுக்கு “மெமோ’
சேலம்: சேலம் மாநகராட்சியில், நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கை எட்டாத, பில் கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட வருவாய் பிரிவு பணியாளர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் அசோகன், “மெமோ’ வழங்கியுள்ளார்.
சேலம் மாநகராட்சியில், வரிவிதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 209. கடந்த ஃபிப்ரவரி மாதம் வரை, 17 கோடியே, 79 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2012-13க்கு எதிர்பார்க்கப்படும் வரி வசூல், 26 கோடியே, 65 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய்.
கடந்த ஃபிப்ரவரி மாதம் வரை தொழில் வரி மூலம், மூன்று கோடியே, 96 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் மூலம், இதுவரை, 14 கோடியே, 98 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-13ம் ஆண்டை விட, 2013-14ம் ஆண்டு கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியில், வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தவும், கான்ட்ராக்டர்களுக்கு முறையாக பில் தொகை வழங்கும் நோக்கத்திலும், நிலுவை வரியை, 100 சதவீதம் வசூலிக்க, மாநகராட்சி கமிஷனர் அசோகன், வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆண்டு இறுதிக்கணக்கு (மார்ச்) மாதத்துக்குள், அனைத்து வார்டுகளிலும், நிலுவையில்லாமல், 100 சதவீதம் வரி வசூல் பணியை முடிக்க உத்தரவிட்டார்.
சமீபத்தில், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான வார்டுகளில், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில வார்டுகளில் மட்டும், 70 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மாநகராட்சி கமிஷனர் அசோகன், கடும் அதிருப்தி அடைந்தார். மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும், 80 சதவீதத்துக்கும் குறைவாக வரி வசூல் செய்த வார்டுகளில் பணியாற்றிய, 40க்கும் மேற்பட்ட பில்கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட வருவாய் பிரிவை சேர்ந்தவர்களுக்கு, “மெமோ’ வழங்கியுள்ளார்.