வந்தவாசி நகராட்சிக்கு வாடகை நிலுவை “சீல்’ நடவடிக்கை தொடரும்: ஆணையர்
வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் அதிக வாடகை நிலுவை வைத்திருந்தால் அக் கடைகளுக்கு “சீல்’ வைக்கும் நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஏ.மகாதேவன் எச்சரித்துள்ளார்.
அதிக வாடகை நிலுவை வைத்திருந்ததற்காக வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமான கடை ஒன்றுக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஏ.மகாதேவன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை “சீல்’ வைத்தனர் . நகராட்சி மேலாளர் ரவி, இளநிலை உதவியாளர்கள் சிவக்குமார், பிச்சாண்டி, ருக்குமாங்கதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.மகாதேவன் கூறியது: வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். அதிக வரி நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு வைத்திருப்பவர்கள் அதிக வாடகை நிலுவை வைத்திருந்தால் அக் கடைகளுக்கு “சீல்’ வைக்கும் பணி தொடரும் என்றார்.