மேட்டூரில் குடிநீர் வரி ரூ.60 லட்சம் நிலுவை குழாய் இணைப்பு துண்டிக்கும் பணி துவக்கம்
மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் தொழிற்சாலைகள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பிலும் குடிநீர் வரி, 60 லட்சம் ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளனர். வரி நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி நேற்று துவங்கியது.மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளது. நகராட்சிக்குள், 7,315 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச், 31ல், 2012-13ம் ஆண்டுக்கான நிதியாண்டு முடிவடையும் நிலையில், இதுவரை மேட்டூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், 60 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.இதனால், நகராட்சி வருவாய் குறைந்து விட்டதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி, நகராட்சிக்குள் நிறைவேற்றிய திட்ட பணிகளுக்கு நிதி வழங்குதல், நகராட்சி செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் பாதித்துள்ளது.
நிலுவை குடிநீர் வரியை செலுத்தகோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.இதில், மேட்டூர் மின்கழக ஒர்க்ஷாப், 5 லட்சம், அரசுபள்ளி, 1.20 லட்சம், போலீஸ் குடியிருப்பு, 2 லட்சம், தனியார் தொழிற்சாலை, 2.85 லட்சம் ரூபாய் என பல்வேறு அரசு அலுவலங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் குடிநீர் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
மார்ச் மாதத்துக்குள் நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத அனைத்து அலுவலங்கள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை குடிநீர் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.