சுகாதாரச் சீர்கேடு: பன்றிகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த 8 பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஜம்மனைப்பள்ளம், சங்கிலிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பட்டி அமைத்து பன்றிகள் வளர்த்து வருகின்றனர். பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிப்பதாக கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேலும், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பன்றிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். திங்கள்கிழமை தென்னம்பாளையம் பகுதியில் 5 பன்றிகளை பிடித்தனர். ஜம்மனைபள்ளத்தில் சுற்றித்திரிந்த 3 பன்றிகளை செவ்வாய்க்கிழமை பிடித்தனர்.