உடுமலை நகரில் ரூ.56 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு அனுமதி
உடுமலை நகரில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
உடுமலை நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி கிராமத்தில் 2.50 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த ரூ.39 கோடி செலவாகும் என அப்போது கணக்கிடப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலையேற்றம் மற்றும் நிர்வாகத்தில் காலதாமதம் என பல்வேறு காரணங்களால் திட்ட மதிப்பீடு படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.56 கோடிக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகள் மற்றும் இணைப்புக் கட்டணம் வசூலிக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதன்படி குடியிருப்புகள், வணிக அடிப்படையிலான கட்டடங்கள் ஆகியவற்றிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டண வசூலில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
பாதாளச் சாக்கடை திட்டம் வரும் முன்னரே கடந்த 5 ஆண்டுகளாக டெபாசிட்டுகள் வசூலிக்கப்பட்டு வந்ததால் மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மானியங்கள் பெறப்படும் என நகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அங்கீகாரம் கொடுத்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக அங்கீகாரத்தை குடிநீர் வடிகால் வாரிய உதவிக் கோட்ட பொறியாளர் சுப்பிரமணியம், உடுமலை நகராட்சி ஆணையர் பொ.கண்ணையாவிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது (படம்). உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.