6 மாநகராட்சி ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தில்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரீதாபாத் ஆகிய 6 மாநகராட்சி ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், “”60 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நாள்தோறும் 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இவற்றில் 9,205 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 6,137 டன் (40 சதவீத) பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சிதறிக் கிடக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “”இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சம் தருவதாக உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் இந்தத் தலைமுறையை மட்டுமின்றி எதிர்வரும் தலைமுறைகளையும் பாதிக்கக் கூடியவை என்பதால் இவ்விஷயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டியுள்ளது. முதற்கட்டமாக, தில்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரீதாபாத் ஆகிய 6 நகரங்களில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் திட்டத்தை நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு இந்த நகரங்களின் ஆணையர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.