சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர், கொல்லம்பாளையத்தில் 4 மலிவு விலை உணவகம் திறப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர் மற்றும் கொல்லம்பாளையம் ஆகிய 4 இடங்களில் தமிழக அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளதாக மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. மலிவு விலை உணவகத்தில் ஒரு இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என குறைந்த விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் தற்போது தமிழகத்திலுள்ள பிற மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதைதொடர்ந்து தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இடம் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அனைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர் மற்றும் கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் மலிவு விலை உணவகம் துவங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், கூலித்தொழிலாளர் நிறைந்த பகுதிகளில் மலிவு விலை உணவகம் துவக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் இந்த 4 இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் ஆலோசனையின் பேரில் தேர்வு செய்துள்ளோம்.
குறிப்பிட்ட 4 இடங்களிலும் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் தேர்வு செய்து அங்கு மலிவு விலை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் அமைய உள்ள இந்த உணவகத்தில் டோக்கன் வழங்கப்பட்டு, பபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும். இந்த உணவகத்தில் ஒரு இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என முதற்கட்டமாக 3 அயிட்டங்கள் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
படிப்படியாக கூடுதல் உணவு வகைகள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலிவுவிலை உணவகங்களை திறக்கும் தேதி குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.