ஈரோட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க திட்டம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தனியார் நிறுவனம் உதவியுடன் மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனத்தின் ஆலோசகர் லீனா கரில்லா தலைமையிலான குழுவினர் ஈரோட்டுக்கு திங்கள்கிழமை வந்தனர். மேயர் ப.மல்லிகா பரமசிவம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு துணைமேயர் கே.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறியது:
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம், 80 அடி சாலைத் திட்டம் மற்றும் பிற சாலைகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அதேபோல கனி மார்க்கெட்டில் ரூ.37 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பசுமை வளாகம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கங்காபுரம், முத்தம்பாளையம் பகுதிகளில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கவும், பெருந்துறை சாலை, சித்தோட்டில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. சாக்கடை, குப்பை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கருத்துகளை அறிக்கையாக தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்ய இக்குழு முடிவு செய்துள்ளது என்றார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சிப் பொறியாளர் ஆறுமுகம், மாவட்ட அனைத்துத் தொழில்வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.