சித்திரை திருவிழா வீதிகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை
தேனி:வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா வீதிகளை, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேனி அல்லிநகரத்தில் வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா முதல் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை விழா நடக்கிறது. விழாவை ஒட்டி, அல்லிநகரத்தில் இருந்து சாமி புறப்பட்டு, காவடி ஊர்வலத்துடன், முக்கிய வீதிகளை சுற்றி வீரப்ப அய்யனார் கோயிலை சென்றடையும். தற்போது இந்த வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் சாமி ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படும்.ரோடுகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். உடனடியாக சீரமைக்க வேண்டும், இப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ,என இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மனு கொடுத்திருந்தார் இதனை தொடர்ந்து தேனி நகராட்சி தலைவர் முருகேசன், கமிஷனர் ராஜாராம், துணைத்தலைவர் காசிமாயன், அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் வீரமணி, சுந்தரபாண்டியன், சண்முகசுந்தரம் உட்பட பலர் வீதிகளை சுற்றிப்பார்த்தனர். இந்த ரோடுகள் உடனடியாக சீரமைக்கப்படும், என தலைவர் முருகேசன் மக்களிடம் உறுதியளித்தார்.