பதாகைகள் வைக்க கட்சிகளுக்கு நிபந்தனை
விழுப்புரத்தில், பதாகைகள் வைப்பதற்கு நகராட்சி மற்றும் காவல் துறையின் அனுமதி அவசியம் என்று விழுப்புரம் உட்கோட்ட காவல் துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக் கூட்டத்துக்கு டி.எஸ்.பி. சங்கர் தலைமை வகித்தார். நகர ஆய்வாளர் ராமநாதன், மேற்கு ஆய்வாளர் வாசுதேவன், தாலுக்கா ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீஸார் பலர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் அதிமுக நகர முன்னாள் அவைத் தலைவர் அன்பழகன், தேமுதிக ஆதவன்முத்து, பாஜக சக்திவேல், இந்திய கம்யூனிஸ்ட் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் விழுப்புரம்-பாண்டி ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. எனவே இரு சக்கர வாகனங்களை பூங்காத் தெரு, காந்திசிலை முதல் ஆஞ்சேநேயர் கோயில் வரை உள்ள பகுதிகளில் நிறுத்த வேண்டும். அதேபோல் அனுமதியின்றி யாரும் பதாகைகள் வைக்கக் கூடாது. பதாகைகள் வைப்பதற்கு முதலில் நகராட்சியிடமும், அதனைத் தொடர்ந்து காவல்துறையிடமும் அனுமதி பெற வேண்டும். நகராட்சி அனுமதி அளித்தால்தான் காவல் நிலையம் சார்பில் அனுமதி அளிக்கப்படும் உள்ளிட்ட கருத்துக்கள் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.