அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சியில் அம்மா திட்டத்தில் ரூ. 5 கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சியில் மக்களைத் தேடி வருவாய்துறை என்ற அம்மா திட்டத்தின் கீழ் ரூ. 5கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி பேரூராட்சியில் அம்மா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் மொத்தம் 251 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது, மக்களை அரசு நிர்வாகம் சந்தித்து அவர்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் அம்மா தி்ட்டம் உருவாக்கப்பட்டது. திட்டம் என்பது மக்களுக்காக அல்ல என்பதை மாற்றி மக்களுக்காகத்தான் திட்டம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது அம்மா திட்டம்.
அதே போல பள்ளபட்டி பேரூராட்சியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி பேரூராட்சிகளில் மொத்த மதிப்பு 251 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் முதியோர் உதவித் தொகை ரூ. 1000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது 30 லட்சம் பயனாளிகள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். இவை அம்மா திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இப்பகுதி மக்கள் 2009 ல் நடைபெற்ற மக்களவை தேர்தல், 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவிற்கு மக்களாகிய நீங்கள் ஆதரவு அளித்தது போல தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் நல்ல ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், அரவக்குறிச்சி பேரூராட்சிதலைவர் என்.மணிகண்டன், பள்ளபட்டி பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையதுஇப்ராஹீம், அரவக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் சிவசெல்வி, உறுப்பினர்கள் எம்ஜிஆர் மனோகரன், ஜோதி, அயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.