குடிநீர் கட்டண நிலுவை ரூ. 25 லட்சம் வசூல்: 7 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
கரூர் நகராட்சியில் குடிநீர் கட்டண பாக்கி ரூ. 25 லட்சம் வசூலிக்கப்பட்டு, அதிக நிலுவை வைத்துள்ள 7 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள், அரசு துறை, கல்வி நிறுவனங்கள் ஆகியவை சுமார் ரூ. 4.14 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.
இதை விரைந்து செலுத்த வேண்டும், இல்லாவிடில் குடிநீர் இணைப்பு ஏப். 15 முதல் துண்டிக்கப்படும் எனவும் நகராட்சி அண்மையில் எச்சரித்தது. இதையடுத்து குடிநீர் பாக்கியை பலர் செலுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 2 லட்சம் வசூலாகிறது என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி கூறியது:
குடிநீர் கட்டண நிலுவை ரூ. 25 லட்சம் வசூலாகி உள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, பணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அதிக அளவில் நிலுவை வைத்துள்ள 7 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாக்கியை செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கும் பணி தொடரும் என்றார்.