குடிநீர் வரி பாக்கி 25 லட்சம் ரூபாய் வசூல் 7 இணைப்பு துண்டிப்பு; கரூர் நகராட்சி அதிரடி
கரூர்: குடிநீர் வரி பாக்கி 25 லட்சம் ரூபாயை அதிரடியாக, கரூர் நகராட்சி வசூல் செய்தது. மேலும் ஏழு இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
கரூர் நகராட்சியில், 48 வார்டுகளில் 37,000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூர், தாந்தோனி, சணப்பிரட்டி, இனாம்கரூர் ஆகிய பகுதிகளுக்கு வாங்கல், நெரூர் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் போர்வெல் அமைக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு இணைப்பு தவிர, அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வங்கி, மருத்துவமனை, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், பள்ளிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பழைய நகராட்சி பகுதிகளுக்கு, 93 ரூபாய், புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 60 ரூபாய் என குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2012 நடப்பு 2013ம் நிதியாண்டு மார்ச், 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதுவரை கரூர் நகராட்சியில் வீடு, அரசுதுறை, கல்விநிறுவனங்கள் என மொத்தம், நான்கு கோடியே, 14 லட்சத்து, 66 ஆயிரத்து, 684 ரூபாய் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி, நகராட்சியில் திட்ட பணிகள், செலவினங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலுவை உள்ள குடிநீர் வரியை செலுத்தக்கோரி நகராட்சி சார்பில், நோட்டீஸ் அனுப்பியும் எந்த பலனுமில்லை.
கடந்த ஏப்ரல், 15ம் தேதியிருந்து நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத அனைத்து அலுவலகங்கள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிரடி நடவடிக்கையால் நகராட்சி குடிநீர் கட்டணம் கணிசமான அளவு வசூலாகி உள்ளது.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி கூறியதாவது:
குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, 15ம் தேதி முதல் இணைப்புகள் துண்டிக்கும் பணி துவங்கியது. இதன்காரணமாக, 25 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலாகி இருக்கிறது. மேலும் அதிகளவில் நிலுவை வைத்துள்ள ஏழு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பாக்கியை செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு வரும், 27ம் தேதி வரை நடக்கும். பொதுமக்கள் இதை தவிர்க்க கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.