வேலூரில் 3 கல்லூரிகளில் 2,219 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்

லேப்–டாப்
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கும் 742 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பலராமன் தலைமை தாங்கினார். கலையரசு எம்.எல்.ஏ., துணை மேயர் வி.டி.தருமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார்.
ஊரிசு கல்லூரியில் நடந்த விழாவில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சதாசிவம் முன்னிலை வகித்தார். முதல்வர் அருளப்பன் வரவேற்றார்.
டி.கே.எம். கல்லூரியில் நடந்த விழாவில் செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரேவதி வரவேற்றார்.
3 கல்லூரிகளிலும் மேயர் கார்த்தியாயினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொத்தம் 2,219 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நடைபாதை
உங்களின் நடைபாதை, சரியான பாதையாக சிறப்பாக இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் உங்களின் நட்பு வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும். உயர்கல்வி, படிப்பு, திருமணம் என்று எங்கு சென்றாலும் ஆசிரியர்களை நினைத்து அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற வேண்டும்.
லேப்–டாப் வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்று உள்ளீர்கள். முதல்–அமைச்சர் சட்டசபையில் கூறும்போது, அனைத்து மாணவர்களுக்கும் லேப்–டாப் வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் தான் வழங்கமுடியவில்லை என்று கூறினார். நேற்று இரவு லேப்–டாப் வந்தது. உடனே உங்களுக்கு இன்று லேப்–டாப் வழங்கப்படுகிறது.
உயர்ந்த அரசு என்பதில், வறுமை இருக்க கூடாது, தரமான பொருளாதாரம் இருக்க வேண்டும். அழியாத கல்விச் செல்வம் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலை இருக்க வேண்டும் என்பது தான். அதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
தனித்திறமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. உங்களின் தனித்திறமையை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். இந்த தனித்திறமை தான் உங்களின் வாழ்க்கைக்கு உதவும். ஏழைகளுக்கும் கல்வித் தரம் கிடைக்க வேண்டும் என்று லேப்–டாப் வழங்கப்படுகிறது. லேப்–டாப்பை பயன்படுத்தி தரமான கல்வி கற்று நமது மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும். வ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகளில் கல்லூரி பேராசிரியர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.