குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சு எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் கடலூர் நகரசபை கமிஷனர் எச்சரிக்கை
கடலூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக குடிநீர் குழாய்களில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாலும், பொது குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து நகராட்சி கமிஷனர் காளிமுத்து உத்தரவின் பேரில் நகரசபை ஊழியர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பொது குடிநீர் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்து இருந்ததை கண்டுபிடித்து, இணைப்பை துண்டித்தனர். இதுபோன்று மொத்தம் 13 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
இது பற்றி கடலூர் நகரசபை கமிஷனர் காளிமுத்து கூறியதாவது:–
கடலூர் நகராட்சி பகுதியில் பொது குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மோட்டார் பறிமுதல் செய்வதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதமும் விதிக்கப்படும்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீட்டு தோட்டங்கள், செடி, கொடிகளுக்கு குடிநீரை பயன்படுத்தி வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தெருக்குழாய்களில் தண்ணீரை பிடித்து முடித்ததும் தண்ணீர் வீணாகாமல் குழாயை சரியாக மூடி விட்டு செல்ல வேண்டும்.
கடலூர் சில்வர் கடற்கரையில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ரூ.3½ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. பூங்காவில் உள்ள உடைந்த உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.