தினமணி 18.09.2009
ராஜபாளையம் பகுதியில் 8 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு– ஆணையர்
ராஜபாளையம், செப். 17: ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது விரைவில் 8 நாட்களுக்கு ஒருமுறையாகவும், பின்னர் 6 நாட்களுக்கு ஒருமுறையாகவும் குடிநீர் வழங்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சித்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவத்தாவது:
ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் தற்போது குடிநீர் நபருக்கு சராசரியாக 35 லிட்டர் தண்ணீர் கணக்கிட்டு 10 நாட்களுக்கு ஒருமுறை 45 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நபருக்கு 85 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
16 ஆழ்குழாய், 6 திறந்தவெளி கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் 26 விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 20 ஆழ்குழாய் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில் 6 போடப்பட்டுள்ளது. இதில் 3 ஆழ்குழாய்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மேலும் 6-வது மைல் நீர்த் தேக்கப் பகுதியில் 14 புதிய ஆழ்குழாய் போடப்பட உள்ளது.
கடந்த இரு நாட்களாக மலையடி வனப்பகுதியில் ஓரளவு மழை பெய்தது. இதனால் தற்போது கூடுதலாக 5 லட்சம் தண்ணீர் கிடைக்கிறது. மேலும் பூசனிப் படுகை, முடங்கியார் பகுதியில் விவசாயக் கிணறுகளிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் கிடைத்தும், புதிய ஆழ்குழாய் முடிந்ததும் 8 நாட்களுக்கு ஒருமுறையும், பின்னர் 6 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 2 செ.மீ. அளவுக்கு வனப்பகுதியில் மழை பெய்தால் 6 மைல் நீர்த் தேக்கத்திற்கு அதிக தண்ணீர் தேங்கி குடிநீர்ப் பிரச்னை தீர வாய்ப்புள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.