குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சினால் நடவடிக்கை
குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தோட்டங்களுக்கு பாய்ச்சுதல், ஆடு, மாடுகளைக் குளிப்பாட்ட பயன்படுத்துவதாகப் புகார்கள் வருகின்றன. இவ்வாறு குடிநீரைப் பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதால், சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற செயல்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும், குடிநீர் குழாயின் அருகில் குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதால் டெங்கு காய்ச்சல், நீரினால் பரவும் நோய்கள் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சில பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி பயன்படுத்தி வருவது ஆய்வின் போதும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் மூலமும் தெரிய வருகிறது. இவ்வாறு மின் மோட்டார் வைத்து உறிஞ்சி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.
மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், குடிநீர் குழாய்கள் மற்றும் ஆதாரங்களைச் சேதப்படுத்துபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.