தினத்தந்தி 29.04.2013
கோவையில் விதிமுறை மீறல் எதிரொலி: 6 வணிக வளாக கட்டிடங்களுக்கு ‘‘சீல்’’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் 6 வணிக வளாக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.
201 கட்டிடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர
தீ விபத்தில் 4 பெண்கள் பலியானார்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில்
தீத்தடுப்பு பாதுகாப்பு, மற்றும் கட்டிட விதிமுறைகள் எதுவும்
பின்பற்றப்படவில்லை என்று தெரிய வந்ததால் கோவை நகரம், மற்றும் மாவட்டம்
முழுவதும் உள்ள பொது கட்டிங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு
அதிகாரிகள் குழு ஆயத்தமாகி வருகின்றது.
இதற்கிடையில் முதல் கட்டமாக விதிமுறை மீறிய 201 கட்டிடங்களை சீல் வைப்பதற்கு கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.
நேரில் ஆய்வு
இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள், உதவி கமிஷனர்
சிவராசு தலைமையில் கோவையில் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டிடங்களை நேரில்
ஆய்வு செய்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.ஆர்.ஜி பள்ளிக்கு எதிரில் உள்ள 2 வணிக
வளாக கட்டிடங்கள், விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைத்தனர்.
அப்போது அந்த கட்டிடங்களில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடம்,
வேலையை நிறுத்தி விட்டு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. உடனே அவர்கள் தங்கள்
வேலையை நிறுத்தி விட்டு சென்றனர்.