கோவை உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி
கோவை உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
உயர்கல்வி மையம்
கோவை அரசு கலைக்கல்லூரி மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், கோவை–நஞ்சப்பா ரோட்டில் உயர்கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சிவில் சர்வீசஸ் படிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் மாணவ– மாணவிகளுக்கு கோவை அரசு கலைக்கல்லூரி அரசியல் சார் அறிவியல் துறை பேராசிரியரும், உயர்கல்வி மைய தலைவருமான டாக்டர் பி.கனகராஜ் இலவச பயிற்சி அளித்து வருகிறார்.
தேர்வு முடிவு வெளியீடு
உயர்கல்வி மையத்தில் மாணவர்களுக்கு ஆண்டு வதும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மூலம் டெல்லியில் நடைபெறுவதை போலவே பல்வேறு கட்டங்களாக சிவில் சர்வீசஸ் மாணவ–மாணவிக ளுக்கு மாதிரி நேர்காணல்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:–
5 பேர் தேர்ச்சி
திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 460–வது இடம், திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்குமார் 343–வது இடம், காங்கயத்தை சேர்ந்த அபிநயா நிஷாந்தினி 817–வது இடம், டெல்லியை சேர்ந்த மனோஜ் 271–வது இடம், ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் 789–வது இடம் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இந்த தகவலை இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சியாளர் பேராசிரியர் பி.கனகராஜ் தெரிவித்தார்.