தினபூமி 04.05.2013
பசுமை வீடு திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது
சென்னை, மே.4 – பசுமை வீடு திட்டத்திற்கு 2013-14-ம் ஆண்டிற்கான
பயனாளிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி
தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது குளச்சல்
சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் கூறியதாவது:-
தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் குளச்சல் தொகுதிக்கு வீடுகள் கட்டித் தர அரசு ஆவன செய்யுமா என்றார்.
அதற்குப் பதிலளித்து அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் பயனாளிகள் தேர்வு
செய்யப்பட்டு ரூ.1.80 இலட்சம் அலகுத் தொகையில் 2011-12 ஆம் ஆண்டில் 101
வீடுகளும், 2012-13 ஆம் ஆண்டில் 120 வீடுகளும் ஆக மொத்தம் 221 வீடுகள்
கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 2013-14 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்
கீழ் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றது என்றார்.