புதிய நீர் இறைப்பான் கண்டுபிடிப்பு:அரசூர் கல்லூரி மாணவர்கள் சாதனை
அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்கள், மிதிபெடல் மற்றும் சைக்கிள் சட்டத்துடன் கூடிய புதிய நீர் இறைப்பானை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மின் தேவை இல்லாத, இக்கருவியை பயன்படுத்தி நீர் நிலைகளில் 10 மீட்டர் ஆழம் வரை நீர் இறைக்கமுடியும்.
வி.ஆர்.எஸ். கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல் பிரிவு மாணவர்கள் ர.ரியாஸ், பா.தட்சணாமூர்த்தி மற்றும் பு.மூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து இணை பேராசிரியர் பா.செல்வபாரதியின் மேற்பார்வையில் இந்த நீர் இறைப்பானை வடிவமைத்துள்ளனர்.
சாதாரண சைக்கிள் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள மிதிபெடலை சைக்கிள் இயக்குவதுபோல இயக்கினால் போதும், நீர்நிலைகளில் எளிதாக நீர் இறைக்கமுடியும்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள வேளையில் இந்த நீர் இறைப்பானை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கருவியை மலைப்பிரதேசம், பாலைவனச்சோலை, கிராமங்கள் என எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளுக்கும், தோட்டங்களுக்கும் நீர் இறைக்க இக்கருவியை பயன்படுத்த முடியும். இக்கருவிக்கான உற்பத்திச்செலவு மற்றும் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என மாணவர்கள் தெரிவித்தனர்.