தினமணி 10.05.2013
தள்ளுவண்டி வியாபாரியின் மகள் புவியியலில் முதலிடம்
தினமணி 10.05.2013
தள்ளுவண்டி வியாபாரியின் மகள் புவியியலில் முதலிடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு புவியியல் பாடத்தில் சென்னை
மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தள்ளுவண்டி வியாபாரியின் மகளான செல்வஜோதி, புவியியல் பாடத்தில் 200-க்கு
198 மதிப்பெண் எடுத்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2
படித்தார் செல்வஜோதி. இவரின் தந்தை டேவிட் முத்துசாமி சாலையோரத்தில்
தள்ளுவண்டி கடை அமைத்து பழ வியாபாரம் செய்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ். ஆவதே லட்சியம்: புவியியல் பாடத்தில் முதலிடம் பெற்றது குறித்து
மகிழ்ச்சி தெரிவித்த செல்வஜோதி மேலும் கூறியது: இந்தச் சாதனைக்கு காரணம்
ஆசிரியர்களும் பெற்றோரும் தான். இதற்கு மாநகராட்சிக்கு நன்றி
தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழை மக்களுக்கு சேவை
செய்வதே எனது லட்சியம் என்றார். இவரது தங்கையும் பத்தாம் வகுப்பு தேர்வு
எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து
செல்வஜோதி 1115 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவிகள் முதலிடம்: இதேபோல, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் மொத்த
மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவிகளே முதல் மூன்று இடங்களையும்
கைப்பற்றியுள்ளனர். புல்லா அவென்யு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவி வீரசெல்வி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் (1145 மதிப்பெண்கள்).
சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யாவும்,
வேளச்சேரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியாவும் இரண்டாம் இடத்தைப்
பிடித்துள்ளனர் (1142 மதிப்பெண்கள்).
திருவொற்றியூர் புத்தா தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி
ஆயிஷா சித்திகா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் (1138 மதிப்பெண்கள்).
இதில் வீரசெல்வியின் தந்தை வீரப்பன் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில்
அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். பிரியாவின் தந்தை சிட்டிபாபு
வீடு வீடாக சென்று ஊதுபத்தி விற்பவர். நித்யாவின் தந்தை பாபு மாவுமில்
தொழிலாளியாகவும், ஆயிஷா சித்திகாவின் தந்தை பாபு டெய்லராகவும் தொழில்
செய்து வருகின்றனர்.
இவர்கள் 4 பேரும் சி.ஏ. தேர்ச்சி பெற்று கணக்கு தணிக்கையாளராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தனர்.
இவர்கள் 5 பேரையும் மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து மேயர் சைதை
துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய மேயர் சைதை துரைசாமி, 5 மாணவிகளின் உயர்
கல்விக்கான செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார்.