தனியார் ஆக்கிரமித்த ரூ2.50 கோடி நிலம் மாநகராட்சி மீட்பு
கோவை,: கோவை லே அவுட்டில் தனியார் ஆக்கிரமித்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொத்தை மாநகராட்சி மீட்டது.
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு அருகே நேரு நகரில் அங்கண்ணன் லே அவுட் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்படுத் தும்வகையில் பூங்கா அமைப்பதற்காக 21 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் 8 சென்ட் இடத்தை தனியார் ஆக்கிரமித்து 3 சென்ட்டில் 360 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டி னார். வீட்டுக்கு வரி போடுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார்.
மாநகராட்சி அலுவலர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, அவர் கட்டிய வீடு பொதுமக்கள் உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் இந்த சொத்து தனக்குரியது என்று கோரி மாநகராட்சி மீது கோவை 2வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 30-4-13ல் தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் வரதராசன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையை அந்த இடத்தில் வைத்தனர்.
மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2.50 கோடி இருக்கும். இந்த லே அவுட்டில் தற்போது 16 வீடுகள் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட 8 சென்ட் நிலத்துடன், இதையொட்டி காலியாக கிடக்கும் 13 சென்ட் நிலத்தை சுற்றி முள் வேலி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல கோடி மதிப்புள்ள சொத்தை மாநகராட்சி மீட்ட சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.