நெல்லை மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி நடவடிக்கை
நெல்லை, : நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.
சந்திப்பு பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கும் சாக்கடைகளில் பன்றிகள் சங்கமிக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடிநீர் மாசுபடுகிறது. இதனை யடுத்து பன்றிகளை பிடிப்பதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி மதுரையில் இருந்து பன்றி பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று பாளை யங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.
இந்திராநகர், பெரியார்நகர், சாமாதானபுரம், துப்புரவு தொழிலாளர் காலனி போன்ற பகுதிகளில் பட்டி அமைத்து பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவைகள் அங்குள்ள சாக்கடைகளில் உருண்டு புரளுகின்றன. பன்றி பிடிப்பவர்களை பார்த்ததும் அவைகள் ஓட்டம் பிடித்தன.ஆனால் அவர்கள் பெரிய வலைகளை வீசியும், சுருக்கு கண்ணிகள் மூலமும் பன்றிகளை பிடித்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இவை காட்டுப்பகுதியில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.