தினமலர் 22.05.2013
“ஸ்நாக்ஸ்’ சாப்பிட அழைத்த அதிகாரி 15 நிமிடம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 13 தீர்மானம் ஓ.கே.,
கோவை:கோவை மாநகராட்சி அவசர கூட்டத்தில், எவ்வித விவாதமின்றி, 15 நிமிடத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில், “ஸ்நாக்ஸ்’ சாப்பிட கவுன்சிலர்களை அன்புடன் அழைத்தார் மாநகராட்சி துணை கமிஷனர்.கோவை மாநகராட்சி அவசரக்கூட்டம், மேயர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், ஒவ்வொரு தீர்மானத்தை மேயர் வாசித்து முடித்ததும், நிறைவேற்றப்படுகிறது என அவரே அறிவித்தார்.
ரயில்வே மேம்பால பணிகளுக்காக ரோடுகளை ஒப்படைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தி.மு.க., கவுன்சிலர் சாமி பேசுகையில், “”ரயில்வே மேம்பால பணிக்காக ரோடுகளை, நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைக்க வேண்டாம். அவர்கள், சர்வீஸ் ரோடுகளை பராமரிப்பதில்லை பணிகள் நடக்கும் வரை தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும்” என்றார்.குறுக்கிட்ட மேயர், “”ரயில்வே மேம்பால பணிகளுக்காக, மாநகராட்சி ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைக்காவிட்டால், மேம்பால திட்ட மதிப்பில் 50 சதவீதம் மாநகராட்சி செலுத்த வேண்டும்.
“”ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைத்தால், திட்டப்பணிக்கு மாநகராட்சி பணம் செலுத்த தேவையில்லை. சர்வீஸ் ரோட்டை மாநகராட்சி வசம் திரும்ப பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்” என்றார்.இக்கூட்டத்தில், 13 தீர்மானங்களையும் மேயர் வாசித்து முடித்ததும், “கூட்டம் நிறைவடைந்தது’, எனக்கூறி, இருக்கையில் இருந்து எழுந்தார். காலை 11:30 மணிக்கு துவங்கிய கவுன்சில் கூட்டம், 11:45 மணிக்கு நிறைவடைந்தது. வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டு, அமர்வுப்படி பெறுவதற்குள் கவுன்சில் கூட்டம் நிறைவு பெற்றதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“கவுன்சிலர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என, அறிவித்த துணை கமிஷனர் சிவராசு;
“”அனைவருக்கும் “ஸ்நாக்ஸ், டீ’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இருக்கையில் அமரவும். வருகைப்பதிவேட்டில் தவறாமல் கையெழுத்திட்டு செல்லவும்” என்றார்.