மழைநீர் கால்வாயில் கழிவுநீரை செலுத்தினால் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடை உரிமம் ரத்தாகும் மேயர் சைதை துரைசாமி எச்சரிக்கை
மழைநீர் கால்வாயில் கழிவுநீரை செலுத்தினால் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று மேயர் சைதை துரைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி மன்ற கூட்டம்
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் பென்ஞ்சமின், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தினை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்தார். பின்னர் மேயர் சைதை துரைசாமி தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
890 கழிப்பிடங்கள்
அதைத் தொடர்ந்து கேள்வி–நேரம் தொடங்கியது. கேள்வி–நேரத்தின் போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–
பி.வி.தமிழ்செல்வன் (காங்கிரஸ்):– சென்னை மாநகராட்சியில் கட்டண கழிப்பிடங்கள் எத்தனை? சென்னை மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மாநகராட்சியின் பணியாளர்களா? அல்லது ஒப்பந்த பணியாளர்களா?
மேயர் சைதை துரைசாமி:– சென்னை மாநகராட்சியில் மொத்தம் 890 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில் கட்டண கழிப்பிடங்கள் 102 ஆகும். சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததார பணியாளர்களும் பணி புரிந்து வருகின்றன
ரிப்பன் மாளிகை புதுப்பொலிவு எப்போது?
பி.சீனிவாசன் என்கிற எம்.ஜி.ஆர்.வாசன் (அ.தி.மு.க.):– சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் முதலில் எப்போது புணரமைக்கும் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது? தற்போது புணரமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது? எவ்வளவு நாட்களில் பணி முடிவு பெற்று புதுப்பொலிவுடன் செயல்பாட்டிற்கு வரும்?
மேயர் சைதை துரைசாமி:– ரிப்பன் மாளிகை புரணமைக்கும் பணி 16.11.2009 அன்று தொடங்கப்பட்டது. பணியின் முடிவுத்தொகை ரூ.9 கோடியே 55 லட்சமாகும். தற்சமயம் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேற்படி பணியானது வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். அதன் பின்னர் ரிப்பன் மாளிகை புதுப்பொலிவுடன் செயல்பாட்டிற்கு வரும்.
மேயர் எச்சரிக்கை
சத்திய நாராயணன் (எ) ப.சத்தியா (அ.தி.மு.க.):– மழைநீர் வடிகால்வாயில் வியாபாரிகள் தங்களது கடைகளின் கழிவுநீரை உபயோகப்படுத்துகிறார்கள். எனவே மழைநீர் வடிகால்வாய் பெரிய கால்வாயுடன் கட்டவும், அனுமதியின்றி செல்லும் கழிவுநீரை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் சைதை துரைசாமி:– மழைநீர் கால்வாயில் கழிவு நீரை பயன்படுத்தும் கடைகள் கண்டறியப்பட்டால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், வீடுகளில் மழைநீர் கால்வாயில் கழிவு நீரை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூட்டத்தில் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.