பாதாளச் சாக்கடைப் பணி: ஆட்சியர் ஆய்வு
நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் ரூ. 76.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆட்சியர் எஸ். நாகராஜன் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில், மேலராமன்புதூர் அசோக் அவென்யூ, சைமன்நகர் சாலைப் பகுதியில் நடைபெறும் இப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது,
நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் மக்களின் சுகாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் விஞ்ஞானரீதியாக கழிவுநீரை அப்புறப்படுத்த பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு முதல்வரால் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக நகராட்சியின் 41 வார்டுகளுக்கு இத் திட்டம் செயல்படுத்த ரூ. 76.04 கோடியும், ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ. 1.90 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இத் திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளைத் தரமான முறையில், குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சிவதாணு செட்டியார், உதவி செயற்பொறியாளர் பழனி, நகராட்சி நகர்நல அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.