அம்மா உணவக புதிய வகைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு: ஒரேநாளில் 33 ஆயிரம் பொங்கல் விற்பனை
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஒரே நாளில் மட்டும் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கூடுதலாக பொங்கல், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றின் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.இதனையடுத்து காலையில் வழங்கப்படும் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் வழங்கப்படும் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கருவேப்பில் அல்லது எலுமிச்சை சாதமும் வழங்கப்படுகிறது.ஏற்கனவே ஏழை மற்றும் தொழிலாளர்கள் அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு அளித்து வந்தனர். இப்போது கூடுதல் உணவு வகைகள் அளிக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்த விற்பனை, திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 200 அம்மா உணவகங்களிலும் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மேலும் மதிய வேளையில் 18,146 கருவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கருவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். இன்று முதல் நாள் என்பதால் இரண்டு சாத வகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் புதிய சாத வகைகளின் விற்பனை தொடங்கப்பட்டதால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை சரிந்துள்ளது. இந்த உணவகங்களில் வழக்கமாக சுமார் 3.30 லட்சம் இட்லிகளும் 30,000 தயிர் சாதங்களும் 60,000 சாம்பார் சாதங்களும் விற்பனை ஆகும். புதிய உணவு வகைகளின் அறிமுகத்தால், சுமார் 2.50 லட்சம் இட்லிகளும், 35,000 சாம்பார் சாதங்களும், 28,000 தயிர் சாதங்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளன.அம்மா உணவகங்கள் தொடங்கியபோதே, கூடுதல் உணவு வகைகள் வழங்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.