12 ஆயிரம் இட்லிகள் 1 மணி நேரத்தில் தீர்ந்தன
திருநெல்வேலியில் அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 10 இடங்களிலும் சேர்த்து 12 ஆயிரம் இட்லிகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார். அனைத்து உணவகங்களிலும் முதல் நாள் மதிய உணவு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.
திங்கள்கிழமை காலைமுதல் 10 மலிவு விலை உணவகங்களும் முழு அளவில் செயல்படத் தொடங்கின. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட்டது. ஒரு ரூபாய் இட்லியை வாங்க அதிகாலை முதலே மக்கள் மலிவு விலை உணவகங்களை முற்றுகையிடத் தொடங்கினர்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து இட்லி வாங்கி சாப்பிட்டனர். அனைத்து உணவகங்களிலும் ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்றுத் தீர்ந்தன. மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள உணவகத்தில் மட்டும் சில இட்லிகள் மிச்சம் இருந்தன. அவை மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொரு கடையிலும் தலா 1200 இட்லிகள் என தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சில கடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டன.
ஒரு இட்லி ரூ.1 வீதம் ஒவ்வொரு கடையிலும் ரூ.1200-க்கு இட்லி விற்பனையானது. 10 கடைகளிலும் மொத்தம் ரூ.12 ஆயிரத்துக்கு இட்லி விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல மதியம் 12 மணிமுதல் ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொரு கடையிலும் தலா 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொரு கடையிலும் ரூ. 2400 வீதம் 10 கடைகளிலும் ரூ.24 ஆயிரத்துக்கு மதிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சாப்பிட்டனர். உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.