மதுரையில் அம்மா உணவகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் இட்லிகள் விற்பனை
மதுரை:மதுரையில், அம்மா உணவகம் தொடங்கிய முதல் நாளே, ரூ.1க்கு விற்ற இட்லிகள், 10 ஆயிரமும் உடனே விற்றுத் தீர்ந்தன. 10 இடங்களிலும், காலை 7 மணிக்கு தொடங்கிய விற்பனை, அரை மணி நேரத்தில் முடிந்தது. அடுத்தடுத்து கூடிய மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மதிய உணவான சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கும் அதே நிலையே. ஒவ்வொரு உணவகத்திற்கும், 12 பேர் கொண்ட மகளிர் குழு, சமையல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர், அவசர தேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலை மூலம், அரிசி, மளிகை சாமான்கள், காஸ் உள்ளிட்டவை, 15 நாட்களுக்கு ஒரு முறையும், மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் மூலம், காய்கறிகள் தினமும் சப்ளை செய்யப்படும்.
ஒவ்வொரு உணவகத்திலும், இட்லிக்காக, 20 கிலோ அரிசி, 5 கிலோ உளுந்து பயன்படுத்தப்படும். அவற்றை தனித்தனியே அரைக்க, ஒவ்வொரு குழுவிற்கும், பிரத்யோக கிரைண்டர்கள் தரப்பட்டுள்ளன. சாம்பார் சாதத்திற்கு, 15கிலோ அரிசி, 8 கிலோ பருப்பும், தயிர் சாதத்திற்கு 12 கிலோ அரிசியும், 12 லிட்டர் தயிரும் பயன்படுத்தப்படுகிறது. தயிரை பாதுகாக்க, “பிரிட்ஜ்’ வசதி செய்துள்ளனர். சாம்பார் சாதம் 350 கிராம், தயிர் சாதம் 350 கிராம், இட்லி 100 கிராம் வீதம், எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட்லி தயாரிக்க, பாத்திரத்திற்கு பதில், உயர்ரக ஓட்டல்களில் பயன்படுத்தும், “டிரே’ தரப்பட்டுள்ளது. சாம்பாருக்கு ரூ.850 மதிப்பில் காய்கறிகள், ஒவ்வொரு உணவகத்திற்கும், வினியோகிக்கப்படும். “டோக்கன்’ முறையில், உணவுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
விடுமுறை கிடையாது: விடுமுறை இல்லாமல், “அம்மா’ உணவகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். சமையல் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு, சென்னையில் ரூ.300, தின ஊதியமாக வழங்கப்படுகிறது. மதுரையில் ரூ.200 முதல் ரூ.250 வரை வழங்க முடிவு செய்துள்ளனர்.
விடுமுறை இல்லாமல் இயங்கும் முதியோர் இல்லத்திற்கு வாய்ப்பில்லை குறிப்பிட்ட அளவு உணவு விற்க, முன்பே இலக்கு நிர்ணயித்திருந்தாலும், விற்பனையை பொறுத்து, உணவு தயாரிக்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்திருந்தனர். தொடக்கத்தில் உணவுகள் மிஞ்சினால், அவற்றை முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்றோர் இல்லத்திற்கும் வழங்க, வலியுறுத்தியிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு வரவேற்பு இருப்பதால், உணவுகள் முதியோர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. தேவைக்கு ஏற்ப, உணவு தயாரிப்பை அதிகரிக்க, முடிவு செய்துள்ளனர். சமையலர்களுக்கு தடுப்பூசி சமையல் பணியில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு, “ஆல்பண்டசோல்’ மாத்திரை, “டைபாய்டு’ தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.