தினபூமி 07.06.2013
அம்மா உணவகங்களில் தினமும் 50,000 பேர் சாப்பிடுகிறார்க
சென்னை, ஜூன். 7 – சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் அம்மா
உணவகங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம்
தொடங்கப்பட்ட போது அம்மா உணவகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.30 அல்லது
ரூ.40 ஆயிரம் வருவாய் கிடைத்தது. தற்போது ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம்
வருவாய் உயர்ந்துள்ளது.
கடந்த 3-ந்தேதி அன்றைய ஒரு நாள் வருவாய் 9 லட்சத்து 65 ஆயிரமாகும்.
இப்போது ரூ.10 லட்சத்தை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. அம்மா
உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. தினமும் குறைந்தது 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக கணக்கெடுப்பில்
தெரிய வந்துள்ளது.
தினமும் 3 லட்சம் இட்லி விற்பனை ஆகி வந்தது. பொங்கல் அறிமுகம்
செய்யப்பட்ட பிறகு இட்லி விற்பனை 2 1/2 லட்சமாக குறைந்துள்ளது. தினமும் 35
ஆயிரம் பொங்கல் விற்பனை ஆகிறது. தயிர் சாதம் 20 ஆயிரமும், சாம்பார் சாதம்
40 ஆயிரமும், கறிவேப்பிலை சாதம் 18 ஆயிரமும் விற்கப்படுகிறது. நாள்
ஒன்றுக்கு சாதம் வகைகள் மட்டும் ஒரு லட்சம் விற்பனையாகிறது.
காலையில் பொங்கல் போட்ட பிறகு அம்மா உணவகங்களில் வியாபாரம்
சூடுபிடித்துள்ளது. உணவகங்கள் உள்ள பகுதி வாழ் மக்கள், கூலி வேலை
செய்பவர்கள் காலை டிபனை குறைந்த செலவில் முடித்து கொள்கின்றனர். அம்மா
உணவங்களில் உணவு வகைகள் புதிதாக அறிமுகம் செய்யப்படுவதால் விற்பனை
அதிகரித்து வருகிறது.
இட்லி மட்டும் விற்பனை செய்த போது சிறு கடைகள், தள்ளு வண்டி கடைகளில்
வியாபாரம் செய்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் பொங்கல் அறிமுகம்
செய்த பிறகு சிறு ஓட்டல்களில் வியாபாரம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை
குறைந்துள்ளது. சிறு ஓட்டல்களில் பொங்கல் ரூ.15, ரூ.20-க்கு
விற்கப்படுகிறது.
ஆனால் அம்மா உணவகங்களில் ரூ.5-க்கு பொங்கல் வழங்கப்படுவதால் கூட்டம்
அலை மோதுகிறது. இதனால் பெரிய ஓட்டல்களுக்கு எந்த விதபாதிப்பும் இல்லை.
அம்மா உணவகங்கள் உள்ள சுற்றுப் பகுதியில் இருக்கும் சிறு கடைகளில் விற்பனை
குறைந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறு ஓட்டல் நடத்துபவர்களிடம்
கேட்ட போது இந்த தகவலை கூறினர்.
மாலையில் சப்பாத்தி கொண்டு வந்தால் இந்த பாதிப்பு அதிகமாகும் பெரும்
பாலான சிறு கடைகள், தள்ளு வண்டி கடைகள் எல்லாம் மாலை 6 மணிக்கு மேல்தான்
விற்பனை தொடங்குவார்கள்.
அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்க ஆரம்பித்தால் இரவு கடைகள் வியாபாரம்
குறையும் கோயம்பேடு, சென்ட்ரல், ரெயில் நிலைய பகுதியில் உள்ள தள்ளு வண்டி
கடை வைத்திருப்பவர்கள் கூறும் போது, அம்மா உணவங்களில் சப்பாத்தி போட்டால்,
எங்களை போன்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்போது எல்லோரும்
இரவில் சப்பாத்தி சாப்பிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிவித்தனர்.
சென்னையில் அம்மா உணவங்கள் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. 4 அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும்
தொடங்கப்பட உள்ளது. இவை திறக்கப்பட்டால் இதனால் பயன் பெறுவோரின் எண்ணிக்கை
பல லட்சமாக உயரும்.