கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 80, 81, 82, 83, 84 ஆகிய ஐந்து வார்டுகள், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22, 23, 24 ஆகிய மூன்று வார்டுகள் என மொத்தம் எட்டு வார்டுகளில், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டைக்கு, புகைப்படம் எடுக்கும் முகாம் கடந்த 10ம்தேதி துவங்கியது. தொடர்ந்து வரும் 20ம்தேதி வரை நடக்கிறது.
எட்டு வார்டுகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பணி நடக்கிறது. இம்முகாம்களில் புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக வந்து விண்ணப்ப படிவங்கள் வழங்குவார்கள். இதை பூர்த்தி செய்து, ரேஷன்கார்டு நகல்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
புகைப்படம் எடுப்பவர்கள், குடும்பத்துடன் அல்லது தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.