தினகரன் 19.06.2013
தடைசெய்த பிளாஸ்டிக் பை விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்
தமிழகத்தில் 40 மைக்ரான் அளவிற்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது.
தடை
விதிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும்
உள்ள சுகாதார துறை அதிகாரிகள், நககாட்சி ஆணையாளர், சுகாதார
ஆய்வாளர்கள்,பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள்
பகுதியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துப்படுகிறதா
என்பது குறித்து வணிக நிறுவனங்கள், கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், மளிகை
கடைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று கோபி
நகராட்சியிலும் நகராட்சி ஆணையாளர் ஜான்சன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள்
கடந்த சில மாதங்களாக கோபி நகராட்சி பகுதி முழுவதும் நடத்திய சோதனையில்
பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது
தடுக்கப்பட்டுள்ளது. நகரின் அருகே உள்ள கிராம பகுதிகளில் மட்டும் ஓரிரு
இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து
நேற்று நகராட்சி ஆணையாளர் ஜான்சன், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வன்,
சையத்காதர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மொடச்சூர், பச்சமலை ரோடு,
நாய்க்கன்காடு,ஜோதிநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய
சோதனையில் 14 கடைகளில் சுமார் 200 கிலோ அளவிற்கு தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பை இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல்
செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு 2400 ரூபாய் அபராதம் விதித்தனர்.