தினமணி 20.06.2013
தினமணி 20.06.2013
ஆவடி நகராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆவடி நகராட்சியில், பள்ளி மாணவர்களின் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அம்பத்தூரை அடுத்த ஆவடி நகராட்சியில், மழை நீர் சேகரிப்பு குறித்த
விழிப்புணர்வு பேரணி, புதன்கிழமை பெருநகராட்சி ஆணையர் மோகன் தலைமையில்
நடைபெற்றது. நகராட்சிப் பொறியாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி நகர்மன்ற தலைவர் சா.மு.நாசர் பங்கேற்று கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் ஆவடி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர். ஆவடி பஜார் வீதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய
வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள், மழை நீர் சேகரிப்பு குறித்து
நகராட்சி நிர்வாகத்தினரால் அச்சடிக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை பொது
மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் மழை நீர்
சேகரிப்பு அமைப்புடன் கூடிய மாதிரி வீடு வடிவமைக்கப் பட்டு வாகனத்தில்
கொண்டு செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மோகன் கூறியது: நாளுக்கு நாள் நிலத்தடி
நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீரின் தன்மையும் உவர்ப்பாக மாறி வருகிறது.
இனி வரும் காலத்தில் இந்த நகராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையிலும்
நீரின் தன்மை கெட்டு விடாமலும் இருக்கும் வகையிலும் மழை நீர் சேகரிப்பை
மக்களிடம் தீவிரமாக வலியுறுத்த உள்ளோம். புதிய வீடு கட்டுபவர்களிடம்
கண்டிப்பாக மழை நீர் சேகரிப்பு அமைக்க உத்தர விடுகிறோம். என்றார்.