தினத்தந்தி 20.06.2013
கொசு இனப்பெருக்கத்தை தடை செய்யும் வகையில் சென்னையில் 10 லட்சம்
நொச்சி செடிகள் வளர்க்க திட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை
முழுவதும் 10 லட்சம் நொச்சி செடிகளை வளர்க்க திட்டம் தீட்டி
உள்ளது.கொசுக்களை ஒழிப்பதற்காக, முதன் முறையாக சென்னை மாநகரத்தில் உள்ள
பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் ஆறு, கேப்டன் காட்டன்
கால்வாய், ஓட்டேரி நல்லா, அம்பத்தூர் உபரி ஏரி ஆகிய 6 ஆறுகளும் ரூ.6.3 கோடி
மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மூலம் தூர்வாரப்பட்டது.
10 லட்சம் நொச்சி செடிகள்
தற்போது இயற்கை முறையில் கொசுவை கட்டுப்படுத்தும் வகையிலும், நமது
பாரம்பரிய வைத்திய முறையினை பொதுமக்களிடையே எடுத்து செல்லும் வகையிலும்,
தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சியின் 15
மண்டலங்களிலும் 10 லட்சம் நொச்சி செடிகளை வளர்க்க மாநகராட்சி
திட்டமிட்டுள்ளது.அதன்படி முதல் கட்டமாக 3 அடி உயரம் உள்ள 5 லட்சம் நொச்சி
செடிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் நொச்சி
செடிகள் நீர்வழி தடங்களில் நடவு செய்யப்பட்டு, 6 மாத காலத்திற்கு
பராமரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் நொச்சி செடிகள்
வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கொசு இனப்பெருக்கத்திற்கு தடை
நொச்சி செடிகள் இருக்கும் இடத்தில் சுவாசிக்கும் காற்று நுரையீரலை
பாதுகாக்க உதவுகிறது. இச்செடியில் உள்ள வேதி பொருட்கள் நுண் பூச்சிகளான ஈ,
கொசு போன்றவைகளை அருகில் அண்டவிடாமல் தடுக்கும் தன்மை உடையது.மேலும் நொச்சி
செடியில் இருந்து வரும் வாசனையானது கொசுவின் இன பெருக்கத்தினை தடை
செய்யக்கூடியவை. இந்த செடியின் வேரில் உள்ள வேதி பொருள் மூலம் மண்ணின்
வளமும் பாதுகாக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சி மூலம் கோரப்பட்டுள்ள நொச்சி
செடி ஒப்பந்தத்தின் மூலம் தோட்டக் கலை படித்த இளைஞர்கள் மற்றும்
கிராமப்புறங்களில் தோட்ட பண்ணைகள் வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு
மற்றும் தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.மேற்கண்ட
தகவல், சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.