தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
ரூ. 9.44 கோடியில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 9.44 கோடி
மதிப்பீட்டில் 20 கி.மீ. தொலைவுக்கு புதிய பிரதான குடிநீர் குழாய்
பதிக்கும் பணியை மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதிக்கு கொண்டாநகரம் நீரேற்று
நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலான ஏசி குழாய் மூலம் நீரேற்றம்
செய்யப்பட்டு வருகிறது. இக்குழாய் ஏசி குழாயாக இருப்பதால் அதிகமான
இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு பெருமளவு நீர் வீணாகி வருகிறது.
மேலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் சீவலப்பேரி சாலையில் இருந்து
தியாகராஜநகர் வரையுள்ள 4 கி.மீ. தொலைவிலான குழாய்களும் ஏசி குழாயாக
இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த 20 கி.மீ.
தொலைவிலான பழுதடைந்த ஏசி குழாய்களை மாற்றிவிட்டு புதிதாக நவீன இரும்பு
குழாய்களை பதிக்க ரூ. 9 கோடிக்கு பிரேரனை தயார் செய்து அரசுக்கு அனுப்பி
அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியின் உள்கட்டமைப்பு இடைவெளி
நிரப்புதல் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி,
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ. 9.44 கோடிக்கு ஒப்பந்தம்
விடப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் வியாழக்கிழமை
தொடங்கின. மேலப்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நடைபெற்ற
நிகழ்ச்சியில் மேயர் விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி
வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் பூ.ஜகநாதன், ஆணையர் (பொறுப்பு) த.
மோகன், மண்டலத் தலைவர்கள் ஹைதர் அலி (மேலப்பாளையம்), எம்.சி. ராஜன்
(பாளையங்கோட்டை), மாநகராட்சி பொறியாளர் ஜெய்சேவியர் மற்றும் மாமன்ற
உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பழைய பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய நவீன குழாய்கள்
பதிக்கப்படுவதன் மூலம் 16 வார்டுகளில் வசிக்கும் 1,22,714 மக்களுக்கு
சீரான குடிநீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.