தினத்தந்தி 27.06.2013
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைய காரணம்
என்ன? மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி விளக்கம்
காரணம் குறித்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி
விளக்கம் அளித்தார்.
குடியிருப்புகள் மாற்றம்
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தை தொடர்ந்து சிறப்பு
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்
நுங்கை மாறன் என்கிற சந்திரசேகரன் சென்னை மாநகராட்சியில் தொடக்கம் மற்றும்
நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைவாக காணப்படுகிறது இதற்கு
காரணம் என்ன? என்று வினா எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பதில் அளித்து கூறியதாவது:–
கால்வாய்க்கரைக்கு அருகில் உள்ள பல குடியிருப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக
பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து
பள்ளிக்கு வரும் மாணவர்கள் புதியதாக மாற்றப்பட்ட பகுதியில் தம் படிப்பினை
தொடர்கின்றனர்.
ஆங்கில வழி கல்விக்கு ஆர்வம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வமாக
உள்ளதோடு மட்டுமின்றி கட்டணம் கட்டி படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் தினக்கூலிகளாக பணிபுரிந்து வருவதால், அடிக்கடி
தங்கள் குடியிருப்பை மாற்றுகின்றனர். இதுவே மாணவர்களின் சேர்க்கை
குறைவதற்கு காரணமாக கருதப்படுகிறது.
மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க சென்னை மாநகராட்சி
கல்வித்துறை பள்ளிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாட விளையாட்டு
பூங்காக்கள் 30 பள்ளிகளில் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.