தினத்தந்தி 30.06.2013
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மாநகராட்சி ஆணையாளர் பேச்சு
ஆலோசனைக் கூட்டம்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி
பிரதான அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்
வகை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்தும்
முறைகள் பற்றியும் மாநகரா£ட்சி ஆணையாளர் லதா பேசியதாவது:–
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுவானது பெரும்பாலும் வீடுகளை
சுற்றியுள்ள பழைய சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், பழைய டயர்கள், உபயோகமற்ற
மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பூந்தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி,
தேங்காய் ஓடுகள், குளிர்காற்றுப் பெட்டி உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள்
போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே வீட்டை
சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த
வகை கொசுக்கள் பெரும்பாலும் பகலில் கடிக்க கூடியவை. அவை வீடுகளில் உள்ள
இருட்டான பகுதிகளான மேஜை மற்றும் நாற்காலியின் அடிப்பகுதி, கதவு மற்றும்
ஜன்னல்களின் திரைச்சீலைகளின் பின்னால் பதுங்கியிருக்கும். எனவே வீட்டினுள்
சூரிய வெளிச்சம்படும்படி கதவு ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
பாத்திரங்களில் நீண்டநாட்கள் நீர் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு நீர் சேமித்துவைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை காற்று
புகாவண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும். பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு
தேய்த்து வாரம் ஒரு முறை கழுவ வேண்டும். உபயோகமில்லாத தொட்டிகள் மற்றும்
ஆட்டுக்கல் ஆகியவற்றை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும். பொதுமக்கள்
மற்றும் வணிகர்கள் தங்கள் இருப்பிடங்களில் வைத்திருக்கும் பழைய டயர்களை
உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்தாவிட்டால் அவை
அனைத்தும் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். எனவே பொது மக்கள்
அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சுகாதார ஆய்வாளர்களை கொசு புகை மருந்தடிக்கும் பணிகளை
துரிதப்படுத்தவும், ஒலி பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில்
துணை ஆணையாளர் சிவராசு, நகர் நல அலுவலர், நகர் நல மைய மருத்துவ
அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.