தினத்தந்தி 01.07.2013
கோவையில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் 15 ஆயிரம் வீடுகள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வீட்டுமனைகளில் கட்டப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
நிலம் வாங்க ஆர்வம்
கோவை மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம்
உள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து கோவை நோக்கி ஏராளமானோர் வந்து
குடியேறி வருகிறார்கள். இதனால் அவர்களிடம் நிலம் வாங்குவதற்கான ஆர்வம்
அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து
உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து 10 கி.மீட்டர்
தூரத்தில் உள்ள பகுதியில் நிலத்தின் மதிப்பு மிகவும் குறைவாக இருந்தது.
தற்போது அந்த பகுதியில் நிலம் வாங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம்
தேவைப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத மனைகள்
இதற்கிடையே பருவமழை பொய்த்த காரணத்தால் ஏராளமான தரிசு நிலங்கள், விவசாய
நிலங்கள் அதிகளவில் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக கிராமப்புற பகுதியில்தான் அதிகளவில் விவசாய நிலங்கள்
வாங்கப்பட்டு மனைப்பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
மொத்தமாக ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி, அதை மனைப்பிரிவுகளாக
பிரித்து விற்பனை செய்யும் முன்பு, அந்த மனைப்பிரிவுகளுக்கு முறையாக அனுமதி
பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் பல வீட்டுமனைப்பிரிவுகள் விற்பனை
செய்யப்படுகிறது. அதை வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு பிறகு சிக்கல்
ஏற்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் எத்தனை வீடுகள் அனுமதி இல்லாத
வீட்டுமனைப்பிரிவில் கட்டப்பட்டு உள்ளது? அதற்கு அனுமதி அளிக்க அரசு
உத்தரவிட்டு உள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது
அவர்கள் கூறியதாவது:–
பூங்காவுக்கு 10 சதவீத இடம்
ஒரு மனைப்பிரிவை 5½, 3½, 2½ சென்ட் என்று பிரித்து விற்பனை
செய்கிறார்கள். ஒரு வீட்டுமனைப்பிரிவுக்கு அனுமதி வாங்க, அந்த
மனைப்பிரிவில் எவ்வளவு நிலம் இருக்கிறதோ அதில் 10 சதவீத இடத்தை
பூங்காவுக்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் மனையில் பிரிக்கப்பட்டு உள்ள
பகுதிகளுக்கு ரோடுகளும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே
மனைப்பிரிவுக்கான அனுமதி கிடைக்கும்.
உதாரணமாக 5 ஏக்கரில் வீட்டுமனை பிரிக்கப்படுகிறது என்றால் அதில் 50
சென்ட் இடத்தை பூங்கா அமைக்க மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும். அப்படி
கொடுத்தால் தங்களுக்கு லாபம் கிடைக்காது என்று எண்ணும் ஒருசிலர் வீட்டுமனை
பிரிவுக்கு அனுமதி பெறாமல் விற்பனை செய்துவிடுகிறார்கள். அங்கீகாரம் பெறாத
மனைகளில் வீடுகள் கட்டும்போது குடிநீர், மின் இணைப்பு உள்பட அடிப்படை
வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
இடிக்கப்படும்
ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் செய்யும்போது குடிநீர் இணைப்பு,
மின்இணைப்பு எல்லாம் கொடுக்கப்பட்டு விடுகிறது. மாநகராட்சி சார்பில்
வரியும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திடீரென்று அங்கீகாரம் பெறாத பகுதியில்
கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்ற உத்தரவு வந்தால், வரிதான்
வசூலிக்கப்படுகிறதே, வீட்டை இடிக்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்.
உடனே வீடுகள் இடிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் நிலம் வாங்கும்போது, அங்கீகாரம் பெற்று இருக்கிறதா
என்று பார்த்து வாங்க வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 15
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைப்பிரிவில்
கட்டப்பட்டு உள்ளது. அத்துடன் ஏராளமான வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாமல்
விற்பனைக்கு போடப்பட்டு உள்ளது.
எனவே அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வாங்க வேண்டாம் என்று
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்
அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அரசிடம் இருந்து இதுவரை
எவ்வித உத்தரவும் வரவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறைந்து விடும்
இது குறித்து ஒருசிலர் கூறும்போது, ‘பொதுமக்கள் மனையை வாங்கும்போது அந்த
நிலத்துக்கு அங்கீகாரம் பெற்று இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய
அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அங்கீகாரம் பெறாமல் மனைகள்
விற்பனை செய்யப்படுவது குறைந்துவிடும்’ என்றனர்.