தினமணி 04.07.2013
தினமணி 04.07.2013
ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர்
ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மேயர் செ.ம. வேலுசாமி வேண்டுகோள் விடுத்தார்.
கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் தலைமையில் அரசுத் துறை
அலுவலர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் க.லதா முன்னிலை
வகித்தார்.
மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை,
போக்குவரத்துத் துறை மற்றும் மின் துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில்,
துறை வாரியாக மேயர் ஆய்வு செய்து பேசியது:
கோவை மாநகரில் சாலைகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மேம்படுத்தி
எளிதாக்குவது நம்முடைய முக்கிய பணி. வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்
பலமடங்கு அதிகரிக்கிறது. இருக்கும் சாலைகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு
தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோவை மாநகராட்சியில் 466 கி.மீ. நீளத்திற்கு போடப்பட்ட பாதாள சாக்கடை
பணிகளில் 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள்
விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
காந்திபுரத்தில் நாள் ஒன்றுக்கு 7000 முறை பேருந்துகள் இயக்கம் உள்ளது.
எனவே 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் உயர்மட்ட பாலம் கட்டும்போது
காந்திபுரத்தில் போக்குவரத்தைக் குறைப்பதற்கும், எளிதாக்குவதற்கும் உரிய
திட்டத்தை நெடுஞ்சாலைத் துறையினர் தயாரிக்க வேண்டும்.
லட்சுமி மில் சந்திப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் நிலையில்
உள்ளன. ராமநாதபுரம் முதல் புலியகுளம் வரை உள்ள சாலைப் பணிகளையும்
நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.
ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலையில் சீரமைப்பு பணிகளையும் தேசிய
நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் முடிக்க வேண்டும். போக்குவரத்து,
நெடுஞ்சாலை, மின் துறையினர் என்ன பணி செய்கிறோம் என்பதை மாநகராட்சிக்குத்
தெரிவிக்க வேண்டும். போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் காவல்
துறையினருடன் இணைந்து சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதற்குத்
தேவையான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றார் மேயர்.
துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத்
தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், பி.சாவித்திரி, மாநகராட்சிப் பொறியாளர்
சுகுமார், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முருகேசன், வையாபுரி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.