தினமலர் 05.07.2013
மழைநீர் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் :குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அறிவுரை
கடலூர் : மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அமல்ராஜ் கூறினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கடலூர் ஜாங்கிட் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. உதவி இயக்குனர் (ஊராட்சி) கதிரேசன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அமல்ராஜ் தலைமை தாங்கி பேசுகையில், “அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாதல், தொழிற்சாலை வளர்ச்சி உட்பட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு சராசரி மழை அளவு 1,316 மி.மீ., ஆகும். இதனால், கடலூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.
குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக முதல்வர் ஜெ., கடந்த 2001ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தைத் துவக்கினார். அனைவருக்கும் தங்கள் வீடுகள், பகுதிகளில் மழைநீர் சேகரிக்கும் கடமை உள்ளது.
மழைநீரை சேமிப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஊராட்சி தலைவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில், செயற் பொறியாளர் அந்தோணிசாமி, பொறியாளர்கள் ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.