தினமணி 12.07.2013
போடியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், 20 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
போடி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரியவந்ததை அடுத்து, கடந்த 2 வாரமாக டெங்கு
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்
ஒரு பகுதியாக, கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி, வீடு வீடாகச் சென்று தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வகையில்
பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. பல தெருக்களில் தண்ணீர் தேக்கி வைக்க
பயன்படுத்திய சிமென்ட் தொட்டிகளை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால்,
பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
இதனிடையே, போடியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில்,
நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்கள் மற்றும்
பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரம் மாணவர்கள், போடி நகராட்சியின் கீழ் இயங்கும்
32 அங்கன்வாடி மையங்கள் மூலம் 8 ஆயிரம் பேருக்கும் நிலவேம்பு கசாயம்
வழங்கப்பட்டது. தொடர்ந்து, புதன், வியாழக்கிழமைகளிலும் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையும் வழங்கப்படுகிறது.
நிலவேம்பு கசாயம் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுவதாக,
நகராட்சி ஆணையர் தெரிவித்தார். நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கான
ஏற்பாடுகளை, நகராட்சி சுகாதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.