தினமணி 19.07.2013
பழனியில் அரசு விதிமுறைகளுக்கு உள்படாத பிளாஸ்டிக் கேரி பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கடைகள் மற்றும் உணவகங்களில் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள
பிளாஸ்டிக் கேரி பைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என்ற
உத்தரவு உள்ளது. ஆனால், பழனி பஸ் நிலையம், அடிவாரம் பகுதிகளில் இதுபோன்ற
மைக்ரான் குறைவாக தயாரிக்கப்பட்ட பாலித்தீன் பைகளில் பொருள்கள் விற்பதாக
தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாசுக்
கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் குணசேகரன் தலைமையிலான குழுவினரும்,
பழனி நகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன்,
சேகர், ராமசுப்பிரமணி, செந்தில்குமார், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய
குழுவினரும் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
பழனி காந்தி மார்க்கெட், காந்தி ரோடு, பஸ் நிலைய வளாகம், அடிவாரம்
பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின்போது ஏராளமான கடைகளில் 40
மைக்ரான்களுக்கும் குறைவான அளவுள்ள கேரி பைகள் பயன்படுத்தப்படுவது
தெரியவந்தது. பல கேரி பைகளில் 40 மைக்ரான் என அச்சிடப்பட்ட நிலையில்,
அதற்கான தரம் இல்லாததை ஆய்வுக் கருவிகள் மூலம் கண்டறியப்பட்டது.
சுமார் 500 கிலோ எடையுடைய இந்த கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவை அனைத்தும் மாட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறு, சிறு
துண்டுகளாக வெட்டி மறுசுழற்சி அல்லது சாலை போடும் பணிக்காக
பயன்படுத்தப்படும் என, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இம்மாதிரியான பிளாஸ்டிக் கேரி பைகள் கடைகளில் பயன்படுத்தப்பட்டால்,
அவை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.