தினமலர் 24.07.2013
குடிசை பகுதியில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்முதல் முறையாக பம்மல் நகராட்சியில் துவக்கம்
பம்மல்:பம்மல் நகராட்சியில், குடிசைப் பகுதி மக்களின் வசதிக்காக, முதல் முறையாக, நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், தினசரி, ஒரு வீட்டிற்கு ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பம்மல் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. 12வது வார்டு, குடிசை பகுதி கொண்டது. இப்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளுக்கு, லாரிகள் மூலமாகவும், சின்டெக்ஸ் தொட்டி மூலமாகவும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பாலாறு குடிநீரும் வழங்கப்படுகிறது. 250 லிட்டர்ஆழ்துளை கிணறு மூலம் வழங்கப்படும் தண்ணீர், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. சமையல் செய்வதற்கும், துணி துவைப்பதற்கும், பாத்திரம் கழுவவும் மட்டுமே பயன்படுகிறது.
இதனால், பணம் கொடுத்து, குடிநீர் கேன் வாங்கும் நிலை இருந்தது.இந்த நிலையில், நகராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக, பம்மல் நகராட்சியில், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டு உள்ளது.முதல் கட்டமாக, குடிசை பகுதி கொண்ட, பம்மல் நகராட்சி, 12வது வார்டில் அமைக்கப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தை, எம்.எல்.ஏ., தன்சிங் திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
தினசரி, ஆழ்துளை கிணற்றில் இருந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. பின், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், அருகேயுள்ள தொட்டியில் நிரப்பப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 250 லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.கூடுதல் மையங்கள்இதை தொடர்ந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினசரி, ஒரு வீட்டிற்கு, ஒரு குடம் குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.நகராட்சி தலைவர் இளங்கோவன் கூறுகையில், ”மூவேந்தர் நகர், பாத்திமா நகர், எம்.ஜி.ஆர்., தெரு, பொன்னி நகர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில், மக்களின் வசதிக்காக, கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்துவருகின்றன,” என்றார்.