தினமணி 27.07.2013
தினமணி 27.07.2013
கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: மேயர் விளக்கம்
சென்னையில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாள்களாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இது
குறித்து பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் கொசுத்
தொல்லையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர்
சைதை துரைசாமி கூறியதாவது:
அடையாறு, கூவம் ஆறுகள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளில் ரூ. 6.8 கோடி
செலவில் மணல் மேடுகள், செடிகள், ஆகாயத்தாமரை செடிகள் ஆகியவை அகற்றப்பட்டு
கொசுப்புழு நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் கொசுப்புழுக்
கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமைகளில் காலை 5 மணி
முதல் 7 மணி வரையும் வியாழக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும்
சிறப்பு புகை பரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா ஆகிய நோய்களை பரப்பும் அனாபிலஸ்
மற்றும் ஈடிஸ் வகை கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகின்றன. இவற்றை
கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 6,119 பேர் மலேரியா நோயால்
பாதிக்கப்பட்டனர். ஆனால் 2013-ஆம் ஆண்டு இதுவரை 2,481 பேர் மட்டுமே மலேரியா
நோயால் பாதிக்கப்பட்டனர். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க இதுவரை
828.27 டன் உபயோகமற்ற டயர்கள் மற்றும் 17,860 கிலோ உபயோகமற்ற பொருள்கள்
அகற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 233 பேர் டெங்கு நோயால்
பாதிக்கப்பட்டனர். 2013-ஆம் ஆண்டு 21 பேர் மட்டுமே இந்த நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் ரூ. 35 லட்சம்
செலவில் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம்.
கொசுத்தடுப்பு பணிக்காக 603 கைத்தெளிப்பான்களும், 238 சிறிய புகை
பரப்பும் இயந்திரங்களும் உள்ளன. மேலும் வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரிய
புகை பரப்பும் இயந்திரங்கள் 62-ம், 8 கட்டு மரங்களும் உள்ளன. இவை தினமும்
கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
கொசு தடுப்பு பணியில் 1,452 நிரந்தரத் தொழிலாளர்களும் 1,762 ஒப்பந்தத்
தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் ரூ. 1 கோடியே 75
லட்சம் மதிப்புள்ள கொசு ஒழிப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று மேயர்
தெரிவித்தார்.