சி.எம்.டி.ஏ.,வில் மெட்ரோ ரயில் பிரிவுக்கு மீண்டும் நீட்டிப்பு 4 பதவிகளுக்கு மட்டும் ஒப்புதல்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) உள்ள மெட்ரோ ரயில் பிரிவுக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளுக்காக, சி.எம்.டி.ஏ.,வில், தலைமை திட்ட அலுவலர், தலைமை கணக்கு அலுவலர் உள்ளிட்ட, 10 பணியிடங்களுடன், 2007, ஜூலையில் தனி பிரிவு துவக்கப்பட்டது.
பின், 2007ல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் துவக்கப்பட்டதைஅடுத்து, மெட்ரோ ரயில் பிரிவுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவு தொகையை ஈடு செய்ய, சி.எம்.டி.ஏ., சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கோரியது. இதை ஏற்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது.
அனுமதி
இந்த நிலையில்,’மெட்ரோ ரயில் சார்ந்த பிற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’ என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையேற்று, 2011, ஜூன், 22ம் தேதி வரை செயல்பட, அந்த பிரிவுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன் பின் ஒவ்வொரு ஆண்டும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கோரிக்கை அடிப்படையில் நீட்டிப்பு வழங்கப்பட்டது. கடந்த, 2012ம் ஆண்டு கொடுக்கப்பட்ட நீட்டிப்பு, ஜூன் மாதத்துடன் முடிந்தது.
அந்த பிரிவுக்கு மீண்டும் நீட்டிப்பு வழங்க அனுமதி கோரி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
சி.எம்.ஆர்.எல்., ஒப்புதல்
இந்த நிலையில், கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது போன்று, முதன்மை திட்ட அமைப்பாளர், துணை திட்ட அமைப்பாளர், உதவி திட்ட அமைப்பாளர், முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் என, நான்கு பதவிகளுடன் அந்த பிரிவு மேலும் ஓராண்டுக்கு செயல்பட மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது, மாஸ்கோ சென்றிருக்கும், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், நாடு திரும்பியதும் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தெரிகிறது.