மாலை மலர் 05.08.2013
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு 7 நாளில் அனுமதி அளிக்கும் புதிய முறையை மேயர் சைதை துரைசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவோர், திட்ட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்த நாளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏராளமானோர் கட்டிடம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை சீரமைக்கும் வகையில் ‘பசுமை வழி’ என்ற புதிய திட்டம் மாநகராட்சியால் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தை ரிப்பன் மாளிகையில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பசுமை வழி முறையில் விண்ணப்பித்தால், 7 நாட்களுக்குள் திட்ட அனுமதிக்கு ஒப்புதல் பெறலாம். அதாவது, கட்டிடம் கட்டுவதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ரசீது பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும். அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சட்டவிதிக்கு உட்பட்டு இருந்தால் 7 நாளுக்குள் அனுமதி வழங்கப்படும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் நிலத்தடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மனைகளுக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க முடியாது. மேலும் புதிய முறையில் விண்ணப்பிக்கும் மனைகள் காலியாக இருக்க வேண்டும். ரயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டருக்குள்ளோ, மெட்ரோ எல்லையில் இருந்து 50 மீட்டருக்குள்ளோ உள்ள மனைகள் இந்த புதிய முறையில் விண்ணப்பிக்க முடியாது.