தினமணி 04.08.2013
தினமணி 04.08.2013
நகராட்சிப் பகுதிகளில் “நம்ம கழிப்பறை’ திட்டம் விரைவில் அமல்
தமிழகம் முழுவதிலும் உள்ள நகராட்சிப் பகுதிகளைத்
தூய்மையானதாக வைத்துக் கொள்ளும் வகையில் “நம்ம கழிப்பறை’ திட்டத்தை
செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
தருமபுரி நகராட்சியில் இரண்டு இடங்களில் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
திறந்தவெளிப் பகுதியை கழிப்பறையாக பொதுமக்கள் பயன்படுத்துவதைத்
தடுக்கும் நோக்கில் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்பட்டன.
இந்தக் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் திட்டத்தின் நோக்கம் முழுமை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து, வீட்டில் உள்ள கழிப்பறையை சுகாதார முறையில் எவ்வாறு
பேணுகிறோமோ அதேபோல, தூய்மையானதாக பராமரிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள
147 நகராட்சிகளில் நம்ம கழிவறைத் திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி
நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை அருகேயுள்ள தாம்பரம் நகராட்சி, ஸ்ரீரங்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் திட்டத்தை அனைத்து நகராட்சிப்
பகுதிகளிலும் முதல் கட்டமாக தலா ஓர் இடத்தில் செயல்படுத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள், பெண்களுக்கு தலா இரண்டு
கழிப்பறைகளும், மாற்றுத்திறனாளி ஆண், பெண்ணுக்கு தலா ஒரு கழிப்பறைகளும்
கட்டித்தரப்படும்.
ஒரே இடத்தில் அருகருகே இந்த கழிவறைகள் அமைக்கப்படும். பைபர்
மேல்கூரையுடன் அமைக்கப்படும் கழிப்பறைகளை சேதப்படாமல் இருக்க பொதுமக்கள்
அதிகளவில் கூடுமிடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி நகராட்சியில் இரண்டு இடங்களில் தலா ரூ.17 லட்சத்தில் கழிவறைகள்
அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில்
அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:
ஒவ்வொரு நகராட்சியையும் தூய்மையானதாக மாற்றும முயற்சியாக இந்தத்
திட்டத்தை அறிமுகப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து கூடுதல் எண்ணிக்கையில்
கழிப்பறைகளை அமைக்க வாய்ப்புள்ளது என்றனர் அவர்கள்.