தினமலர் 12.08.2013
கடைக்கு முன் குப்பை குவிந்தால் ரூ.500 நிர்வாக கட்டணம் வசூலிக்கும் பணி மும்முரம்
சென்னை:கடைக்காரர்கள், சாலையில் குப்பை வீசுவதை தவிர்க்க, அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் கட்டாயம் என, மாநகராட்சி அறிவுறுத்தியு உள்ளது. இதை மீறி குப்பை வீசுபவர்களுக்கு, 500 ரூபாய், நிர்வாக கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்தரவு
சென்னையில், கடைகள் அமைந்துள்ள சாலைகளில், குப்பையை அப்புறப்படுத்தும் பணி பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதுபோன்ற சாலைகளில், காலை நேரத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், ஒரு சில மணி நேரத்திலேயே, கடை திறக்கும் உரிமையாளர்கள், கடையில் உள்ள குப்பையை மீண்டும் சாலையில் குவித்து வைக்கின்றனர்.
இந்த குப்பை காற்றில் தெரு முழுவதும் பரவி, குப்பை மயமாக காட்சியளிக்கிறது. இதை தடுக்க, அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் கட்டாயம் என்றும், கடைக்கு முன் சிறிய அளவில் குப்பை தேக்கமடைந்து இருந்தால் கூட, 500 ரூபாய் நிர்வாக கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ரூ.15 ஆயிரம்
இதுகுறித்து, அந்தந்த துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு ரசீது புத்தகம் வழங்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக குப்பையை தெருவில் வீசும் கடைக்காரர்களிடம் நிர்வாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தேனாம்பேட்டை மண்டலத்தில், கடந்த வாரம், 15 ஆயிரம் ரூபாய் வரை குப்பை வீசியவர்களிடம் வசூலிக்கப்பட்டது. அண்ணாநகர் மண்டலத்திலும் இதே அளவு வசூல் நடந்துள்ளது.
எச்சரிக்கை
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குப்பையில்லா சென்னை நகருக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம் தேவை. கடைகளில் சேகரமாகும் குப்பையை தொட்டியில் சேகரித்து, மாநகராட்சி குப்பை தொட்டியில் அதை கொட்ட வேண்டும். சாலையில் வீசுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை. ஓரிரு முறை எச்சரிக்கைக்கு பிறகே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைக்காரர்கள் சிலர் கூறுகையில், ‘பல இடங்களில் குப்பை தொட்டிகள் நீண்ட துாரத்தில் உள்ளன. மற்றவர்கள் கடை முன் வீசும் குப்பைக்கும், எங்களிடம் அபராதம் வசூலிப்பது ஏற்க முடியாது’ என்றனர்.